பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் அதிர்ச்சித் தகவல்

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் அதிர்ச்சித் தகவல்

பட்டலந்த சித்திரவதை முகாமுக்குள் மிகக் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெற்றன .சித்திரவதைக்கு உள்ளான பலரை நான் கண்டேன் .மறுநாள் கொல்லப்படவுள்ளவர்களின் புகைப்படங்களை முதல்நாள் நான் எடுப்பேன்.இது தான் எனது வேலை.

அந்த முகாமில் நன் ரணில் விக்கிரமசிங்கவையும் கண்டுள்ளேன் என இராணுவ பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ புகைப்படக் கலைஞராக இருந்தவர் எனக் கூறப்படும் முன்னிலை சோஷலிசக் கட்சியை சேர்ந்த இந்திராந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியின் ”ஹார்ட் டோல்க்” நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் இந்திராந்த சில்வாவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு,

பட்டலந்தை சித்திரவதைக் கூடம் என்றால் என்ன?

பதில் : பொலிஸார் அரசியல்வாதிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களில் பிரபலமான ஒன்றே பட்டலந்த சித்திரவதைக் கூடம்.

கேள்வி: அங்கு செல்வதற்கு உங்களுக்கு எத்தனை தடவை சந்தர்ப்பம் கிடைத்தது.

பதில்: நான் இராணுவ பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ புகைப்படக் கலைஞராக இருந்தேன். அந்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பணிகளில் ஒன்றாக கொல்லப்படுவதற்காக பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் புகைப்படங்களை எடுப்பதாகவே இருந்தது. இதன்போது நான் கொழும்பில் இருந்த சகல சித்திரவதை முகாம்களுக்கும் சென்றேன். அதற்கு மேலதிகமாக கொல்லப்படுவதற்கு இருந்த சிலரின் புகைப்படங்களை எடுப்பதற்காக இரண்டு தடவைகள் எனக்கு பட்டலந்த சித்திரவதை முகாமுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

கேள்வி: முதல் நாளில் அங்கே பார்த்தது என்ன?

பதில்: முதல் நாளில் மூவரின் புகைப்படங்களை எடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே என்னை சிவில் உடையில் இருந்த பிரதானியே அழைத்தச் சென்றார். நான் முதல் நாளில் அங்கு செல்லும் போது ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்த அறையொன்றில் குறித்த பிரதானியுடன் கதைத்துக்கொண்டிருந்தார். பின்னர் சித்திரவதை முகாமுக்குள் சென்று குறித்த மூவரின் புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்குள் செல்லும் போதும் அந்த பகுதிக்குள் மாத்திரம் சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருந்த 30 பேர் வரையிலானோர் இருந்தனர்.

கேள்வி: எவ்வாறான சித்திரவதைகள்?

பதில்: நெற்றியில் தீக்காயங்களுடன், சிலரின் கண்கள் பாதியில் வெளியே வந்தபடி இருந்தன, சிலரின் கை,கால்கள் உடைக்கப்பட்டிருந்தன.

கேள்வி: அக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சராகவா இருந்தார்?
பதில்: அவர் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார் என்று நினைக்கின்றேன்.
கேள்வி: அவர் எப்படி பட்டலந்தவுடன் தொடர்புபட்டார்?

பதில்: அவர் ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையவர். அண்மைக் காலத்தில் வசந்த முதலிகேவையும் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் காலத்திலும் அவ்வாறுதான். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அவர் தனிப்பட்ட ரீதியிலும் தலையிட்டார்.

கேள்வி: உத்தியோகபூர்வ இல்லமும் சித்திரவதை முகாமும் அருகருகேவா இருந்தன?

பதில்: இரண்டும் அருகில்தான் இருந்தன. உர களஞ்சியசாலைக்கு சிறிது தூரத்தில் உத்தியோகபூர்வ இல்லம் இருந்தது. அங்கிருந்த உத்தியோகபூர்வ இல்லமொன்றில் டக்ளஸ் பீரிஸ் என்பவர் இருந்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வீடொன்று இருந்தது. அவர் அங்கே அதிகளவில் இருப்பார். நான் ஆயிரக் கணக்கான படங்கள் எடுத்துள்ளேன். மறுநாள் கொல்லப்படவுள்ளவர்களின் புகைப்படங்களை முதல்நாள் நான் எடுப்பேன். ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்திடம் இரகசிய அல்பமொன்று இருந்தது. அதனை கைது செய்யப்பட்டவருக்கு அனுப்புவர். அதனை காட்டி யார் உன்னுடன் இருந்தவர்கள் என்று கேட்டறிந்து அவரை கண்டுபிடிக்க வலையமைப்பை ஏற்படுத்துவர். இதன்படி கொல்லப்படும் அனைவரின் படங்களையும் அல்பத்திற்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பர்.

கேள்வி: ரோஹன விஜேவீரவின் இறுதிக் காலத்தை பார்த்தவர் என்றே உங்களை கூறுகின்றனர். அதனைப்பற்றி கூறுங்கள்?

பதில்: அதிகாலையில் என்னை எழுப்பி அழைத்துச் சென்றனர். நான் போகும் போது அங்கிருப்பவர் ரோஹன விஜேவீர என்பது எனக்கு தெரியாது. வட்ட மேசையொன்றில் அவரிடம் விசாரணை நடத்தி கேள்விகளை கேட்டனர். அவரின் படங்களை எடுத்தேன். 1996இல் நான் மெகசின் சிறைச்சாலையில் கைதியாக இருந்த போது சட்டமா அதிபருக்கு சத்தியக்கடதாசியொன்றை அனுப்பி பெயர்களுடன் நான் கண்களால் பார்த்தவற்றை குறிப்பிட்டிருந்தேன். அவை தொடர்பில் சாட்சியமளிக்க தயார் என்றும் கூறியிருந்தேன்.

கேள்வி: இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சிறந்த காலம் உருவாகியுள்ளது.

ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கமும் உருவாகியுள்ளது?

பதில்: ஜே.வி.பியின் நியமுவா என்ற பத்திரிகையில் எனது சத்தியக் கடதாசியில் இருந்த தகவல்களை வெளியாகியிருந்தன. இவர்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை. இன்னும் சாட்சி தொடர்பில் பேசிக் கொண்டிருக்க அவசியமில்லை. இன்று அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்றார். இதனால் இன்னும் இது தொடர்பில் காலத்தை இழுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று அவரிடம் கேட்கின்றேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )