3572 மி. ரூபாவுக்கு பறந்த மஹிந்த; இரு வருடங்களில் 33 நாடுகளுக்கு சென்ற ரணில்

3572 மி. ரூபாவுக்கு பறந்த மஹிந்த; இரு வருடங்களில் 33 நாடுகளுக்கு சென்ற ரணில்

ஜனாதிபதிகளாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மி. ரூபா, மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மி. ரூபா ,கோத்தபாய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மி. ரூபா , ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மி. ரூபா என்ற அடிப்படையில் நிதி செலவிடப்பட்டுள்ளதாக

பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார்.இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.இதற்கு 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு சுமையாக நாங்கள் செயற்படவில்லை. அதுவே சிறந்த அரசியல் மாற்றத்துக்கான முதல் மாற்றம் . பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் நிலையில் தான் நாடு இன்றும் உள்ளது. பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை நாட்டு மக்கள் எதிர்க்கொண்டார்கள், இன்றும் எதிர் கொள்கிறார்கள். ஆகவே அரசாங்கத்தின் சுமையை மக்கள் மீது சுமத்த முடியாது. ஆகவே ஏதேனும் வழியில் இதனை முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

பதவிக்கான சிறப்புரிமைகள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். பதவிக்கான சிறப்புரிமைகளை சுய விருப்பத்துடன் குறைத்துக் கொண்டுள்ளோம்.ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் குறித்து சில விடயங்களை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் இதர பிரதிநிதிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.இதனை நாங்கள் புறக்கணிக்கவில்லை.

இருப்பினும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளன .

2010 -2014 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபா, 2015-2019 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபா , 2020-2022 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபா , 2023-2024 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி செலவிடப்பட்டுள்ளது.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. நாங்களும் சேவையாற்றியுள்ளோம், இந்த நாட்டு மக்களை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி யுள்ளோம்.இருப்பினும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம்.

2023 -2024 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.இந்த 33 பயணங்களிலும் மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரையில் 3 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உரிய நபர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.இருப்பினும் கடந்த காலங்களில் உரிய தரப்பினர்களா சென்றுள்ளார்களா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றபோது அவருடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் சென்றார்கள்.இதுவும் அரசியல் இலஞ்சமாகும்.பதவிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )