
காணாமல் போனோர் குறித்த அறிக்கையை காணவில்லை; அதற்காக 144 இலட்சம் ரூபா செலவு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ 2016 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ள போதும் அறிக்கைகள் எதுவும் கிடைக்க வில்லை என்றும் கூறினார்
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுவகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் நடந்தால் உடனடியாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக பிரசாரப்படுத்தப்படும் . ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் எதுவும் வெளிவராது.
2016 ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 இலட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்த குழுவின் அறிக்கையும் வெளிவரவில்லை.
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவுக்கு 1063 இலட்சம் ரூபா , ஊழல் எதிர்ப்பு காரியாலயத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு 350 இலட்சம் ரூபா ,
அரசியல் பழிவாங்களுக்கல் தொடர்பான விசாரணை குழுவுக்கு 842 இலட்சம் ரூபா , சுங்கத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுக்கு 318 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 5301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்க வில்லை . ஆனால் 2022 மே 9 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதரமாக விசாரணை செய்து, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நஷ்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.