
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ரணிலை லண்டனில் வைத்து கைது செய்வதற்குத் திட்டம்?
லண்டனுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ‘உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை’யை அடிப்படையாகக் கொண்டு அங்கு வைத்து கைது செய்வதற்கான முயற்சிகளை இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களின் பிற்பகுதியில்,இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில், குறிப்பாக பட்டலந்த சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய குற்றங்களில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுவதுடன் இதன் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்படி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் கைது முயற்சிகளானது, உலகளாவிய அதிகார வரம்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஐக்கிய இராச்சியம் உட்பட சில நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள்- சித்திரவதை, இன அழிப்பு போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களுக்காக தனிநபர்களைத் தண்டிக்க அனுமதிக்கும் ஒரு சட்டக் கொள்கையாகும்.
இந்த நடவடிக்கையின் மூலம் முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேயின் குற்றங்களுக்காக 1998 ஆம் ஆண்டு லண்டனில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கைப் போன்றதாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் 1987-89 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொழும்பிற்கு அருகில் உள்ள பியகம தொகுதியில் அமைந்துள்ள பட்டலந்த தடுப்பு முகாமானது பிரபலமடைந்தது. அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்த ஜே.வி.பி.யை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை தடுத்து வைத்து விசாரிக்கவும் சித்திரவதை செய்யவும் இலங்கை பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இங்கு பல நூற்றுக்கணக்கான ஜே.வி.பி.சந்தேக நபர்கள் மிக மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.