
தமிழக முதல்வருக்கு எமது தலைவர்கள் பயமா?; ஸ்டாலினை சந்தித்தபோதும் மீனவர்கள் குறித்து பேசாதது கவலை தருகிறது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பேசாமல் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் ஆகியோர் அவருடன் இணைந்து சிரித்தவாறு செல்ஃபி எடுத்து கொண்டமை எம்மை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமா எனவும் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா – தமிழகத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தின நிகழ்வுக்குச் இலங்கையில் இருந்து கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.
அவ்வாறுசென்றவர்கள் இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பாக பேசாதாமை எமக்கு வருத்தமளிக்கிறது. அவ்வாறு பேசியது தொடர்பான ஊடக அறிக்கைகளும் வெளியாகவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இதன்போது இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாகவுள்ளது.
இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் தொடர்கதையாகவே உள்ளது. இலங்கை மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்படுகின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை.
கடந்த வருடம் நடுப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சீறுவாணம் விட்டதுபோல, இந்திய இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நோக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மக்களுக்காக இந்த போராட்டத்தை செய்தார்கள், என்று நினைத்து நாங்களும் சந்தோசப்பட்டோம். ஆனால் முதல்வருடன் அவர்கள் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்ததை பார்க்கும்போது, இலங்கை மீனவர்களது விடயம் நினைவில் கூட இல்லை என்பது போலதான் எமக்கு தெரிகிறது.
இந்த நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரும் இந்த குழுவில் சென்றதாக அறியமுடிகிறது. அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை.
எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதல்வர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் செல்ஃபி எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒருதடவை சொல்லியிருக்கலாமே இலங்கை மீனவர்களது பிரச்சினையை.
சிலவேளை இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம். ஏனெனில் உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம்.
ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால் வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லியிருக்கலாமே – என்றார்.

