சமூகத்தை மீண்டும் குணப்படுத்த தடையாக நின்றால் கடும் நடவடிக்கை

சமூகத்தை மீண்டும் குணப்படுத்த தடையாக நின்றால் கடும் நடவடிக்கை

இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த வேண்டும். சமூகத்தில் புதிய நெறி முறையும்,புதிய மதிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும்.இந்த திருப்புமுனையை ஏற்படுத்த எவரேனும் தடையாக நிற்கும் பட்சத்தில், இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த கடுமையான முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் நாம் தயார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் பேசுகையில்,

இலங்கையில் இன்று என்ன நடந்துள்ளது? சிறந்ததொரு சுற்றுச்சூழல் கட்டமைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை – மனித மோதலால் 182பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. சிறந்த அழகியலுடன் கூடிய சுற்றுச்சூழல் கட்டமைப்பு இருந்தாலும் வருடத்திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்கிறோம்.

யானைகளினால் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பெருமளவானோர் இடப்பெயர்கின்றனர். உயிரிழப்பு, பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுத்துகின்றன. எனவே, சுற்றுச்சூழல் கட்டமைப்பை மீளமைப்பதை Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக கருத வேண்டும்.

நமது நாட்டுக்கும் நாட்டின் பிரஜைகளுக்கும் புதிய மதிப்புக்கள் மற்றும் புதிய நெறிமுறைகள் அவசியப்படுகின்றன. மிகத் தவறான விடயங்களை நாம் மதிப்பாக புரிந்து கொண்டுள்ளோம். இன்று இந்த சமுதாயத்திற்குள் ஒரு புதிய மதிப்பு கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இதனை எங்கிருந்து ஆரம்பிப்பது?

முதலில், தமது வாழ்க்கை பற்றிய தமது மதிப்பு அவசியமாகிறது. நான் நினைக்கும் வகையில் எமது நாட்டில் பெரும்பாலான பிரஜைகளுக்கு தமது வாழ்க்கை தொடர்பில் மதிப்பு கிடையாது ஏன் அவ்வாறு சொல்கிறேன்? கடந்த வருடத்தில் ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் கடலில் அல்லது நீர்த்தேக்கங்களில் அல்லது கிணற்றில் அல்லது குளத்தில் விழுந்து இறந்துள்ளனர்.நீரில் மூழ்கி ஐந்நூற்று தொண்ணூற்றைந்து பேர் இறந்துள்ளனர் என்பதிலிருந்து என்ன தெரிகிறது? 2321 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளனர். நாளொன்றுக்கு ஏழு பேர் வாகன விபத்துக்களால் இறக்கும் நாடு

உருவாகியுள்ளது. அதனால் வாழ்வின் மதிப்புக்களை பற்றி அறியாத சமுதாயம், பிறர் வாழ்வு குறித்து அக்கறை இல்லாத சமூகம் உருவாகியிருக்கிறது.

எனவே, இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் புதிய நெறிமுறையும்,புதிய மதிப்பு முறையும் உருவாக்கப்பட வேண்டும். எமது Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், சமூகத்திற்கு ஒரு புதிய நெறிமுறைக் கட்டமைப்பையும், மதிப்புக் கட்டமைப்பையும் உருவாக்குவோம். வாகன விபத்துகளை குறைக்க வேண்டும். அதற்காக, நான் முதலில் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மக்கள் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அதற்காக மக்களின் ஒத்துழைப்பும் தலையீடும் அவசியம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார். மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயார். நெகிழ்வுத் தன்மையுடன் இந்த திருப்புமுனையை ஏற்படுத்த எவரேனும் தடையாக நிற்கும் பட்சத்தில், இந்த சமூகத்தை மீண்டும் குணப்படுத்த கடுமையான முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் நாம் தயார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )