
ரணிலும் அநுரவும் ஒன்றே; எந்த மாற்றமும் இல்லை
ரணில் விக்கிரமசிங்கவின் பாதையிலேயே அநுரகுமார அரசாங்கம் பயணிக்கின்றது என்றும், ஆட்சி மாறினாலும் கொள்கையில் மாற்றத்தை காணமுடியவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அஜித் பிரேரா இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு மேலதிகமாக ஏதாவது புதிய இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறு எதுவும் கிடையாது. ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை அவ்வாறே இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது. இந்த விடயத்தில் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய வாக்குறுதிகள் எதனையும் இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதனை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார். நாங்கள் மாற்றியுள்ளோம் என்றும் இதனாலேயே நிவாரணங்களை வழங்க முடியும் என்று அநுரகுமாரவின் நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் அது பொய்யே.
ரணில் விக்கிரமசிங்கவினால் வரிகளை அதிகரிக்கும் உள்நாட்டு தொழில் துறைகளை கஷ்டத்தில் போடும் வேலைத்திட்டங்களே இருந்தன. அதனையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்த அரசாங்கம் அந்த இணக்கப்பாட்டில் மாற்றம் எதனையும் செய்யவில்லை. விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தாலும் அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியில் இருந்தாலும் இரண்டும் ஒன்றை போன்றே இருக்கின்றது. இருவரின் கொள்கையும் ஒன்றாகவே இருக்கின்றது. விக்கிரமசிங்கவின் பிள்ளைகளுக்கு அநுரகுமாரவின் நண்பர்கள் பிறப்புச் சான்றிதழை வழங்க முயற்சிக்கின்றனர் என்றார்.

