
ஜனாதிபதியை பதவி விலக்க என்ன செய்யவேண்டும்?
(அவ்வை)
ஏப்ரல் 9 அன்று ஆரம்பமாகிய, ஜனாதிபதி கோத்தபாயவை பதவியை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கும் ‘கோட்டா கோ கம’ போராட்டம் இன்றுவரை ஆக்ரோஷமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதவிக் காலம் முடியும் வரை போக மாட்டேன் என்று பதவி நாற்காலியை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார் கோத்தபாய. இலங்கையின் அதியுச்ச சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தின்படி..
ஜனாதிபதி இறந்தால்,
தானே விலகிக் கொள்வதாக அவர் தன் கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தால்,
ஜனாதிபதி தன் குடியுரிமையை இழந்தால்,
அவர் உடல், உள பாதிப்புக்குள்ளாகி தனித்து இயங்க முடியாமல் போனால்,
தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்தினுள் பொறுப்பேற்காமல் போனால்
மட்டுமே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும்.
அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் மையமாக இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியை, அதுவும் அவர் பதவியை விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது பதவியிறக்குவது ஒன்றும் எளிதான காரியமல்ல. ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு ஒரு குற்றப் பிரேரணையை பாராளுமன்றில் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஜனாதிபதியின் தேசத்துரோகம்,
அவரின் அதிகார துஷ்பிரயோகம்,
தவறான நடத்தை,
லஞ்சம், ஊழல்,
தெரிந்தே அரசியலமைப்பை மீறி செயற்படுவது
போன்றனவற்றில் ஒன்றையாவது நிரூபிக்க வேண்டும். நிரூபித்த பின் அது நாடாளுமன்றில் பிரேரணையாக வரும்போது மூன்றில் இரண்டு பகுதியினர் அதை ஆதரித்துக் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். சபாநாயகர் அதை ஏற்று நிகழ்ச்சி நிரலில் சேர்த்தால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிரேரணை தோற்றுப் போனதாகவே கொள்ளப்படும். விவாதம் நடைபெற்ற பின்னும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் சபாநாயகர் அதை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்.
உயர் நீதிமன்றத்தில் ஜனாதிபதியின் குற்றம் நிரூபணமானாலும் நீதிமன்றிற்கு அவரைப் பதவியிறக்கும் அதிகாரம் இல்லை. முடிவை நீதிமன்று சபாநாயகருக்குத் தெரிவிக்கும். சபாநாயகர் மறுபடியும் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுப்பார். ஒரு இரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் ‘ஜனாதிபதியின் பதவிக்கால இறுதி நாள்’ தீர்மானிக்கப்படும். பதவி நீக்கத்தை சபாநாயகர் அறிவிப்பார். இரகசிய வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு கிடைக்காவிட்டால் பிரேரணை தோற்றுப்போய் விடும்.
இவையனைத்தும் சாத்தியமாகாத பட்சத்தில், அடுத்து என்ன செய்யலாம்…?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சட்டத்திருத்தம் மூலம் நீக்க வேண்டும். அதாவது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர், நிதித்துறையை ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றம் பொறுப்பெடுக்க வேண்டும்.
பின்னர், பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவி விலகலைக் கோரலாம். அதற்கும் செவிசாய்க்காத பட்சத்தில், ஜனாதிபதி சேவை செய்வதற்குரிய நிதிவழங்கலைத் தடுக்கலாம். இதன் மூலம் அவர் பதவி விலக நிர்ப்பந்தம் கொடுக்கலாம்.
ஆக, பாராளுமன்றத்தின் பெரும்பான்மை எடுக்கும் தீர்மானம்தான் இங்கு முக்கியமானது.
21வது சட்டத் திருத்தம் என்பது ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து அதிகாரப் பரவல் செய்யும் ஒரு சட்டத் திருத்தமாகும். இந்தச் சட்டம் நிறைவேறுவதை ராஜபக்சர்கள் விரும்பப் போவதில்லை. ஒரு பலமான சட்டத்தை தமக்குச் சாதகமாக உருவாக்கி, அதனுள் அதிகாரக் கோலோச்சும் இவர்களால் அரசப் பட்டினியுடன் வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறார்களோ…..