
இம்மாதம் ஜனாதிபதியை விரட்டியடிப்போம்
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறும் மாதமாக ஜூலை மாதம் அமையும் என்று ஜே.வி.பியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் போராட்டக் களத்தில் மீண்டும் இணைந்துகொண்டுள்ளோம். நாங்கள் கோத்தபாய உள்ளிட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே போராட்டங்களை நடத்தினோம். இதன்போது போராடிய பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வேளையில் சட்டத்தரணிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் எங்களுடன் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். இதன்மூலம் போராட்டம் எத்தகையது என்பதனை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
இதேவேளை தற்போது இருந்ததை விடவும் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. பெற்றோல் வரிசையில் இருந்தாலும் பெற்றோல் கிடைக்காத நிலைமையே உள்ளது. எரிவாயுக்கும் இப்படிதான் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்நிலையில் வரிசையில் நின்ற 22 பேர் உயிரிழந்துள்ளன. இவ்வாறான நிலைமையில் நாங்கள் வாழ்க்கைக்காக போராட வேண்டியுள்ளது.
இதனால் எமது போராட்டத்தை புதிய சுற்றில் முன்னெடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. முன்னிலையான அனைவரையும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ள வருமாறு நாங்கள் அழைக்கின்றோம்.
சோஷலிச இளைஞர் சங்கம் என்ற வகையில், ஜூலை 2 ஆம் திகதி முதல் எமது போராட்டத்தை புதிய பாதையில் முன்னெடுக்கவுள்ளோம். இதன்படி 2 அம் திகதி அனுராதபுரம் மற்றும் கம்பஹா நகரங்களிலும் 3 ஆம் திகதி பொலனறுவை நகரத்திலும், 8 ஆம் திகதி பதுளை நகரிலும், 9 ஆம் திகதி புத்தளம் நகரிலும், 10 ஆம் திகதி கேகாலை நகரிலும் போராட்டங்களை நடத்தவுள்ளோம். கறுப்பு ஜூலை மாதத்தில் எமது போராட்டத்தை வெற்றிப் போராட்ட ஜூலையாக மாற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.