
இலங்கைக்கு ஜூலை 22 வரை பெற்ரோல் இல்லை
அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், எரிபொருள் இறக்குமதிக்கு அணுக முடியாது என சாகல ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டீசல் ஏற்றுமதிக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவை ஜூலை இரண்டாவது வாரத்தில் நாட்டை வந்தடையும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, 4 மாதங்களுக்குத் தேவையான 100, 000 மெற்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜூலை 11 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடையில் கப்பலொன்று வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதா குறிப்பிட்ட சாகல ரத்நாயக்க, ஜூலை 6,10,16,19,21,31 ஆம் திகதிகளில் 33 ஆயிரம் மெற்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கிடைக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது 11,000 மெற்றிக் தொன் டீசல், 5,000 மெற்றிக் தொன் பெற்ரோல், 30,000 மெற்றிக் தொன் உலை எண்ணெய் மற்றும் 800 மெற்றிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜூலை 10 ஆம் திகதி வரை நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.