இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?: இந்தியா வெளிப்படுத்தியுள்ள மறைமுக ஆதரவு

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?: இந்தியா வெளிப்படுத்தியுள்ள மறைமுக ஆதரவு

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கடந்த 15ஆம் இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் இந்தியர்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய இல்லத்திலும் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல அரசியல் தலைவர்களும், இராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்கள் X கணக்குகள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதில் சிலருக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பதிலளித்திருந்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வாழ்த்துக்களுக்கு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

இவர்களுக்கு சாதாரணமாக வாழ்த்துத் தெரிவித்திருந்த சந்தோஷ் ஜா, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, “எமது இருதரப்பு உறவுகளை உங்களுடன் இணைந்து உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.” என பதில் அளித்திருந்தார்.

இந்த பதில் தொடர்பில் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் இடம்பெற்று வருகின்றன.

இந்த பதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குறியீடாக இருக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியா மறைமுகமாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக இந்திய புலனாய்வு அமைப்பான றோ கடுமையாக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள பின்புலத்திலேயே சந்தோஷ் ஜாவின் இந்தக் கருத்து பல்வேறு தரப்பாலும் அவதானிக்கப்பட்டு வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )