“நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை“: கட்சியில் இருந்து நீக்கம் – மனோ கணேசன் காட்டமான அறிக்கை

“நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை“: கட்சியில் இருந்து நீக்கம் – மனோ கணேசன் காட்டமான அறிக்கை

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றபடுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

என் உயிரினும் மேலான கண்டி மாவட்ட மக்களுக்கும் நமது கட்சிக்கும், இவர் செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாததாகும். 2010ம் வருடம் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கடும் இனவாத வன்முறையில் ஈடுபட்ட அந்த நபருடனேயே இந்த வேலுகுமார் இன்று சென்று சேர்ந்து கரங்கோர்த்து உள்ளார்.

வேலுகுமாரின் கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமுகூ தலைவர் மனோ கணேசன், மேலும் கூறி உள்ளதாவது;

2010 ஆண்டு தேர்தலில் எனது தேர்தல் பிரசார முகாமையாளராக இந்த வேலுகுமார் கடமையாற்றியிருந்தார்.

இவரது கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. ரணில் விக்கிமசிங்க என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை இவர்

இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் நிகழும் இத்தகைய துரோகங்களில், இது முதலாவதும் அல்ல. கடைசியுமாக இருக்க போவதும் இல்லை.

ஆனால், இவர் இன்று செய்துள்ள செயல், மிக பெரிய வரலாற்று துரோகம். இந்த வேலுகுமார், வரலாற்று குப்பை தொட்டியில் விழுந்து விட்ட குப்பை.

இத்தகைய துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. மன்னிக்க கூடாது. எனது வரலாற்றில் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை. துரோகிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்று தருவோம். இவருக்கு பாடம் கற்று தருவதுடன், கண்டி மாவட்டத்தின் மீதான எமது உரிமையையும் நாம் நிலை நாட்டுவோம்.

எமது அரசாங்கம் வெல்லும். எமது காலமும் வெல்லும். அரசாங்க பலத்துடன் கண்டியில் நாம் நிச்சயம் களம் இறங்குவோம். அப்போது வரலாறு திரும்பும். என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )