சகல வேட்பாளர்களுடனும்தீர்வு குறித்துப் பேசுங்கள்: சுமந்திரனுக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை

சகல வேட்பாளர்களுடனும்தீர்வு குறித்துப் பேசுங்கள்: சுமந்திரனுக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை

”இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு ஒன்றுக்கு தென்னிலங்கைத் தரப்புகளைச் சம்மதிக்கச் செய்வதற்கான முயற்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் அனைவருடனும் திறந்த மனதுடன் பேச்சுக்களை நடத்துங்கள்” –

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனை கூறியிருக்கின்றார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இவர் இவ்வாறு ஆலோசனை கூறியுள்ளார்.

”இனவாதம் தலை எடுக்காத இந்தத் தேர்தல் சமயம்தான் எல்லாத் தரப்பினுடனும் திறந்த மனதுடன் பேசுவதற்கு மிகப் பொருத்தமான காலம். எல்லா வேட்பாளர்களுடனும் நிபந்தனை ஏதுமின்றிப் பேசுங்கள்.

அவர்களை இணங்க வைக்க முயலுங்கள். அப்படிப் பேசுபவர்களில் யார் தீர்வுக்குப் பொருத்தமானவர்கள் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு, அவர்களை ஆதரிக்கும்படி உங்கள் மக்களை நீங்கள் வழிபடுத்தலாம், அது இறுதி நேரத்தில் செய்ய வேண்டியது.

இப்போது நீங்கள் எல்லோருடனும் மனம் விட்டுப் பேசுங்கள். பொதுவாக இணங்கக் கூடிய விடயங்களை அடையாளம் காணுங்கள்.

”தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரினதும் கருத்து நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தச் செய்யும் விதத்தில் அவர்களுடனான உங்களுடைய உரையாடல் அமைய வேண்டும்.

அப்படி அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களாயின் தேர்தலின் பின்னர்தன்னும் தென்னிலங்கை, தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க அது உதவும்” – என்று இந்தியத் தூதுவர் சுமந்திரனிடம் கூறினார்.

”ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினிடமும் நான் இதைத்தான் கூறியுள்ளேன். எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை விரும்பினால் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எடுக்கலாம். அதற்கு முன்னதாக இப்போது எல்லாத் தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேசுங்கள்” – என்றார் இந்தியத் தூதுவர்.

மாகாண சபைத் தேர்தல்கள், அரசமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ள நிலைப்பாடு, அவை தொடர்பில் தாம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டியலிட்டுள்ள விடயங்கள குறித்து சுமந்திரன் மூலமான தகவல்களை இந்தியத் தூதுவர் இன்று விளக்கமாகக் கேட்டறிந்தார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

இதன் பின்னர் சுமந்திரன் எம்.பி., ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து உரையாடினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )