2 வது வாக்கை பயன்படுத்தும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்

2 வது வாக்கை பயன்படுத்தும் கோரிக்கை தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது வாக்கினை தென்னிலங்கை தலைவர் ஒருவருக்கு அளிக்குமாறு தான் கூறியமைக்கான காரணத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது அவசியமாகும். அதன் மூலமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

விசேடமாக, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தென்னிலங்கைத் தலைவர் நிறைவேற்றவில்லை என்ற விடயம் வெளிப்படுத்த வேண்டியதாகும்.

அவ்வாறான நிலையில் எதற்காக நான் இரண்டாவது வாக்கினை தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு போடுமாறு கோரினேன் என்ற கருத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அதில் முக்கியமான விடயம் பொதுமக்களின் ஜனநாயக விருப்பினை வெளிப்படுத்துவதை நாம் தடுக்க முடியாது. பொதுமகன் ஒருவர் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு சிந்தித்து தெரிவினை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்க முடியாது.

அதேநேரம், தமிழ் பொதுவேட்பாளர் என்பதற்கு அப்பால் தென்னிலங்கை வேட்பாளர் தான் எவ்வாறோ ஆட்சியில் அமரப்போகின்றார். ஆகவே தமிழ் பொதுவேட்பாளரையும் கூடவே தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரையும் நிறுத்துவதன் மூலமாகவும் அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )