
4 வருடங்களின் பின்னர் பிரியா – நடேஷ் குடும்பம் பிலோயலா திரும்பியது
நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – நடேஷ் (பிலோயலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின் மத்திய நகரான பிலோயலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோயலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற
குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோயலாவுக்குத்
திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது. இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.
2018 மார்ச்சில் பிரியாவின் இணைப்பு விசா (பிரிட்ஜிங் விசா) காலாவதியாகிய நிலையில், நடேசலிங்கம், பிரியா ஆகியோரை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்தது.
இத்தம்பதியினருடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு பிள்ளைகளும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இக்குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு எதிராக பிலோயலா நகர மக்கள்
தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தில் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இத்தீர்ப்புகளையடுத்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மேன்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் நாடு கடத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன.
2018 மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பேர்ன் நகரில் உள்ள
குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர்.
2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக்
அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள்
இரண்டு ஆண்டுகள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம்
சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

