
பிரித்தானியாவில் சூடு பிடிக்கும் பொது தேர்தல்: ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
வார இறுதியில் சனிக்கிழமை (ஜூன் 29) கோயிலுக்குச் சென்ற தம்பதியினர், அர்ச்சகரின் வழிகாட்டுதலின்படி பூஜைகள் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
‘பகவத் கீதையை’ வைத்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
ஒருவர் உண்மையாகச் செய்யும் வரை அதன் முடிவைப் பற்றி கவலைப்படாமல், கடமையைச் செய்ய நமது நம்பிக்கை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
அதைச் சொல்லித்தான் என் அன்பான பெற்றோரால் நான் நம்பி வளர்க்கப்பட்டேன், அப்படித்தான் நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன்; என் மகள்கள் வளரும்போது அதைத்தான் நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
பொது சேவைக்கான எனது அணுகுமுறையில் தர்மம்தான் எனக்கு வழிகாட்டுகிறது” என்று ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலையில் கடினமான நாட்களில், உங்கள் ஆதரவை நான் உணர்கின்றேன்.
மேலும் ஒரு பிரித்தானிய-ஆசியப் பிரதம அமைச்சரை பெற்றிருப்பதன் பெருமையை நான் அறிவேன், மேலும் உங்களை ஒருபோதும் வீழ்த்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.” என்றார்.
இதேவேளை, எதிர்வரும் நான்காம் திகதி பிரித்தானியாவில் பொதுதேர்தல் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிவாரமாக கடந்த வாரம் அமைந்திருந்தது.
இந்நிலையில், ஆட்சியை கைப்பற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர முனைப்பு காட்டியுள்ளன.
பஞ்சாபி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்து பெற்றோருக்கு 1980 இல் சவுத்தாம்ப்டனில் பிறந்த சுனக், பிரிட்டனின் முதல் சிறுபான்மை இனப் பிரதமர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.