
மலையக பாடசாலைகளில் 2,0000 இந்திய ஆசிரியர்கள்
இந்தியாவில் இருந்து வந்து இரண்டாயிரம் ஆசிரியர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இவர்கள் மாணவர்களிடையே கல்விக்கு பதிலாக நச்சுக் கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,
தோட்டப்புற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதன்காரணமாக கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாக அண்மையில் ஊடகங்கள் மூலம் தகவலொன்று வெளியாகியிருந்தது. எமது நாட்டு புலானாய்வு பிரிவும் அறிக்கையிட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் புலனாய்வு அறிக்கைகளின்படி இந்திய ஆசிரியர்கள் தோட்டப்புற மாணவர்களுக்கு ஏதோவொருவகையில் நஞ்சை ஊட்டுவதாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எமக்குரிய முறைமையில் செல்லாது வேறு வெளியாரின் உதவிகளை தன்னார்வ அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது வெளியார் வருவது எம் மீதான பாசத்தால் அல்ல.
இதனால் அமைச்சரிடம் நான் கேட்பது என்னவென்றால் குறித்த புலனாய்வு அறிக்கை கல்வி அமைச்சுக்கு கிடைத்ததா? அது தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்கள் மீது அவதானம் செலுத்தப்பட்டதா? இந்திய ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேர் தோட்டப்புற பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதை போன்று வந்து வேறு வகையிலான எண்ணங்கள், நஞ்சை ஊட்டுவதை தடுப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமல்லவா? அது தொடர்பில் கல்வி அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளாரா? என்பதே கேள்வியாகும் என்றார்.