தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

அனர்த்தங்களினால் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 04 ஆகும். புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 6 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் அவிசாவளை மற்றும் முல்லட்டியான பகுதிகளில் பதிவாகியுள்ளன.

அவிசாவளை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், முலட்டியானவில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 20 மற்றும் 27 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 78 வயதான ஆண், 29 வயதுடைய பெண் மற்றும் ஏழு வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

நேற்று (02ஆம் திகதி) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் 152 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இது தவிர, கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசத்தில் 138 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கம்பஹா மாவட்டத்தின் வட்டுபிட்டிவல பிரதேசத்தில் 122 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (03ஆம் திகதி) பின்னர் மழையின் நிலைமையில் ஓரளவுக்கு குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் பருவமழைப் பொழிவில் சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளதால் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (02) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், இரத்னபுர மாவட்டத்தின் அஹெலியகொட பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் 436 மில்லிமீற்ற மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )