நீதிமன்றை மைத்திரி அவமதித்தாரா?

நீதிமன்றை மைத்திரி அவமதித்தாரா?

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை தண்டிக்க உத்தரவிடுமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர் மொன்டேக் சரத்சந்திர என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு இருந்தபோதிலும், பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன 2024 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக காட்டிக் கொண்டு செயற்பட்டதாகவும் மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின்படி, 2024 மே 12 ஆம் திகதி பதவி விலகும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியின் பொறுப்புகளை தாம் நிறைவேற்றியதாக சிறிசேன கூறியதாக மனுதாரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதிவாதி மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நீதி நிர்வாகத்தையும் அவமரியாதை அல்லது அலட்சியம் செய்யும் நிலைக்கு அவர் கொண்டு வந்துள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுதாரருக்கு பிரதிவாதி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் தினேஷ் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி சாந்த ஜயவர்தன ஆஜராகியிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )