13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள் : அரசு உட்பட அனைத்து தரப்பிடமும் கரு ஜயசூரிய வேண்டுகோள்!

13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள் : அரசு உட்பட அனைத்து தரப்பிடமும் கரு ஜயசூரிய வேண்டுகோள்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக நிலவும் இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரிடத்திலும் பகிரங்க கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அதன் ஆரம்பத்திலிருந்து மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் செயற்பாடுகளான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக ஈடுபட்டு வருகிறது. எவ்வாறாயினும், அந்த பயணத்தில் ஒரு தேசமாக, இலக்குகளை அடைவதற்கு நாம் இதுவரை தவறிவிட்டோம் என்பதை அங்கீகரிக்கிறோம். அதுவே தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு காரணமாகியுள்ளது.

வரலாற்றைப் பார்க்கையில், 1948இல் பிரித்தானியப் பேரரசில் இருந்து எமது நாடு சுதந்திரம் அடைந்தமைக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து இனத்தலைவர்களின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது. அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே நாட்டின் சுதந்திரம் என்பதை நினைவுகூருகின்றோம். துரதிர்ஷ்டவசமாக, பிளவுபடுத்தும் இன மற்றும் மத போக்குகள் உட்பட அடுத்தடுத்த நிகழ்ந்தேறிய விடயங்கள் இந்த ஒற்றுமையை சிதைத்துவிட்டன.

தற்போதைய நிலைமையில் நாட்டின் அனைத்து நிலைமைகளும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எனவே, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும் சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்க்கவும் அக்கறையுடன் பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக குறிப்பாக வடக்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தேசத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகும்.

உலகத் தமிழர் பேரவையின் ஊடாக மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே மேம்படுத்தப்பட்ட உறவுகளையும் நேர்மறையான முன்னேற்றங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறோம். தேசிய ரீதியாக கூட்டாக நாம் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புக்களுடனும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கின்றன.

அடுத்த தேர்தலை நாம் நெருங்கும்போது, அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வோடு ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஒன்றிணைவானது முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு வளமான இலங்கையை பரிசாக வழங்க முடியும் என்றுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )