‘வரி’யை குறைத்தால் ‘வரிசை’ யுகம் வரும்

‘வரி’யை குறைத்தால் ‘வரிசை’ யுகம் வரும்

வரி குறைப்பு செய்தால் 6 மாத காலத்துக்குள் மீண்டும் மக்கள் வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடும்.எனவே எக்காரணம் கொண்டும் தற்போதைய வரி கொள்கையை மறுசீரமைக்க போவதில்லை. என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளவும்,இன்னொரு தரப்பினர் தற்போதைய பொருளாதார மீட்சிகளை பலவீனப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

தமது ஆட்சியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரிகள் 24 சதவீதத்தால் குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது .வரி குறைப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிடும் தரப்பினர்கள்,தமது ஆட்சியில் மீண்டும் வரிகளை குறைப்பதாக உறுதியளிப்பது ஆச்சரியம் தருகின்றது.

2024 ஆம் ஆண்டு வரி வருமானமாக 3870 பில்லியன் ரூபாவையும், மொத்த வருமானமாக 4127 பில்லியன் ரூபாவையும் திரட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதல் காலாண்டில் மாத்திரம் 1040 பில்லியன் ரூபா வரி வருமானமும், 1521 பில்லியன் ரூபா மொத்த வருமானமும் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி குறிப்பிடுவது போன்று வரி குறைப்பு செய்தால் அரச வருமானத்தில் 25 சதவீதத்தை இழக்க நேரிடும்.

அரசியல் வாக்குறுதிகளுக்கு அமைய வரி குறைப்பு செய்தால் ஆறு மாத காலத்துக்குள் மீண்டும் மக்கள் வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடும் என்பதை உறுதியாக கூறுகின்றேன் .ஆகவே எக்காரணிகளுக்காவும் தற்போதைய வரிகொள்கைகளை திருத்தம் செய்யப் போவதில்லை.

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதை தடுக்கும் வகையிலேயே ல் நிதி முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்தை எதிர்பார்ப்பவர்களே இந்த சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )