
ஜனாதிபதித் தேர்தல் ; விவாதத்துக்கு தயாரான சஜித் – அனுர: மக்கள் முன்லையில் வருமாறு ஹர்ஷ டி சில்வா சவால்
பொருளாதார குழுக்களுகக்கிடையிலான விவாதத்துக்கு நாள் ஒன்றையும் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கு நாள் ஒன்றையும் வழங்குமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள பொருளாதார கொள்கைகளின் வித்தியாசத்தை நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரும் அறிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவாதத்துக்கு தயார்
அதன்படி, 20ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்துக்கு நாள் ஒன்றை வழங்குமாறு கேட்டிருந்தனர், அதனை வழங்கிவிட்டோம். தற்போது அவர்கள் விவாதத்துக்கு தயாராகி ஒரு நாளை வழங்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா சவால் விடுத்துள்ளார்.
நான்கு மணித்தியாலம் அல்ல எட்டு மணித்தியாலங்கள் கூட விவாதிக்க நாம் தயார் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, இரு கட்சிகளின் பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதத்தை இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதி ஒன்றும் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தை ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கும் 7ஆம் திகதிக்கும் இடையிலான ஒரு திகதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மக்கள் சக்திக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை
அத்துடன் இரண்டு கட்சிகளின் பொருளாதார குழு மற்றும் தலைவர்களுக்கிடையில் இடம்பெறும் விவாத நடவடிக்கைக்கு தேவையான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியிருப்பதாகவும் விவாதத்துக்கான ஊடக நடவடிக்கைக்கு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கான திகதி இன்று 20ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அதன் பின்னர் இந்த விவாதம் தொடர்பாக நாங்கள் கதைக்கவும் மாட்டோம் விமர்சிக்கப்போவதும் இல்லை என தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

