
நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக்கிய பிக்கு; திரியாயில் பிக்கு அடாவடி
குலதெய்வமாக வழிபட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தற்போது சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2002 ஆம் ஆண்டு வந்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் 2021 ஆண்டளவில் பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் மக்களின் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் அவர் புதையல் தோண்டியுள்ளதாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுவரும் திரியாய் மக்கள் நெல் விதைப்பின் போதும், அறுவடையின் போதும் வளத்தாமலையடி நாகதம்பிரானுக்கு நேர்த்தி வைத்து பொங்கிப் படைத்த பின்னரே தமது தொழிலைத் தொடங்குவதாகவும், புல்மோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கூட நம்பிக்கை வைத்து நேர்த்தி வைத்து வந்ததாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த ஆலயதை வழிபட முடியாமலும் நேர்த்திக் கடன்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமையினாலும் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புல்மோட்டை பிரதான வீதியில் நின்று ஆலயத்தை பார்த்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
எனவே தங்களுக்கு துன்பங்கள் வருகின்றபோதெல்லாம் உச்சரிக்கின்ற வளத்தாமலையானை வழிபடுவதற்கு அனுமதி வழங்குமாறு திரியாய் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

