அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ், முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த சதி

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ், முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த சதி

கல்முனையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை உடனடியாக இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்திப்பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அதன்போது செல்வராசா கஜேந்திரன் எம்.பி மேலும் கூறுகையில்,

1993ஆம் ஆண்டில் அமைச்சரவை தீர்மானமொன்றின் ஊடாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த பிரதேச செயலகம் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்ற போதும், போருக்கு பின்னரான காலத்தில் அதனை தரமிறக்கும் சதித்திட்ட செயற்பாடுகள் நடக்கின்றன. பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அதன் பெயர் உப பிரதேச செயலகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் எதேச்சதிகாரமாக இந்த வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் தலையிட்டு அதனை உப செயலகமாக அடக்கி வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த செயற்பாடுகளை கண்டித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அது தொடர்பில் அந்த மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். அத்துடன் பிரதமருக்கும், பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இன்று வரையில் அரசாங்க அதிபரோ, ஆளுநரோ, அமைச்சின் செயலாளரோ அங்கு சென்று நிலைமைகளை ஆராயவோ, ஏன் போராட்டம் நடக்கின்றது என்று கேட்கவோ, பிரச்சினைகளை தீர்த்து வைக்கவோ முயற்சிக்கவில்லை.

ஆனால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பல தடவைகள் அந்தப் போராட்டம் நடக்கும் காலத்தில் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கு விருந்துண்டு வந்துள்ளார். அந்த பிரதேச உத்தியோகத்தர்கள் அவரை வர்த்தக நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்கு பல்வேறு சன்மானங்கள் வழங்கப்பட்டுள்ளன. கையூட்டை பெற்றுக்கொண்டு பிரச்சினைகளை கண்டும் காணமாலும் இருக்கின்றார். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் செயற்படுகின்றார். இதனால் உடனடியாக அவர் அங்கிருந்து இடமாற்றப்பட வேண்டும் என்பதுடன், பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்க முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கைகளை அது பிரதேச செயலகமாக செயற்படுவதற்கு நடவடிக்கையெடுத்து அங்கு கணக்காளரொருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )