
ரணில் – சஜித் – அனுரவை ஒரே மேடையில் ஏற்றும் முயற்சி கைகூடவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்கவுடன் இணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ரணில் – சஜித் – அனுர ஆகிய மூவரையும் ஒன்றிணைக்கும் சமீபத்திய முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 20 அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டது.
ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அரசாங்கத்தில் இணையவில்லை. அந்த நடவடிக்கை தோல்வியடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாசவை இணைக்கும் புதிய திட்டம் செயற்படுத்தப்பட்டது. எனினும் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒருபோதும் கைகோர்க்கப் போவதில்லை, உடன்படிக்கை செய்யப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தமையால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இவ்வாறு ரணில் – சஜித்தை இரு தரப்பினராலும் ஒன்றிணைக்க முடியாமல் போனாலும், ரணில் – சஜித் – அனுர ஆகிய மூவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் திரைமறைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் பிரபலமான தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் சங்கம் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தது.
இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்த போதும், சஜித்தும் அனுரவும் ஒரே நேரத்தில் அதற்கு இணங்கவில்லை. இச்சங்கத்தில் சஜித் மற்றும் அனுர ஆகிய இருவருக்குமே ஆதரவாக பெருமளவானவர்கள் இருப்பதால் அழைப்பை நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இரு தரப்பிலும் மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
சஜித் மற்றும் அனுர இருவரும் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் ஏறுவதற்கு தயக்கத்தை வெளிப்படுத்திய போதிலும் அவர்கள், தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் பங்கேற்க மறுக்கவில்லை. இதன்படி இறுதியில் ஒரே மேடையாக இருந்தாலும் 3 மணி நேரம் இடைவெளிக்குள் மூவரையும் மேடைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஜனாதிபதி ரணில் மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை வைபவத்தில் கலந்து கொண்டு சரியாக மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, சஜித் நான்கு முதல் ஐந்து மணி வரை விழாவில் கலந்து கொண்டு தனது உரையை நிகழ்த்திவிட்டு சரியாக ஐந்து மணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அனுரவுக்கு மாலை ஐந்திலிருந்து ஆறு மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள முக்கியமான இந்த தருணத்தில் ரணில்-சஜித்-அனுரவை ஒரே மேடையில் ஒரே நேரத்தில் கொண்டு வர தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் மேற் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

