
மேதினத்தில் 5000 ரூபா பணம், சாராயம், சோற்றுப் பார்சலுக்கு 1000 மில்லியன் ரூபா செலவு!
5000 ரூபா பணம், சாராயம் மற்றும் சோற்றுப் பார்சல்களை கொடுத்தே அரசியல் கட்சிகள் அதிகளவு மக்களை மேதினக் கூட்டங்களுக்கு அழைத்து வந்துள்ளதாகவும், இதற்காக 1000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகளவில் பணம் செலவிடப்பட்டிருக்கலாம் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், எதிரணியின் சுயாதீன எம்.பியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது தயாசிறி ஜயசேகர மேலும் கூறுகையில்,
மேதினத்தை விடவும் மக்களை அதிகளவில் காட்ட வேண்டும் என்ற நோக்கமே அரசியல் கட்சிகளுக்கு இருந்தன. மேதினத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான அரசாங்கத்தின் யோசனைகளையே முன்வைக்க வேண்டும். ஆனால் இம்முறை மேதினம் முழுமையாக ஒவ்வொருவரின் பலத்தை காட்டுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு 5000 ரூபா வரையில் கொடுத்தே கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு பஸ்ஸில் 50 பேர் போனால் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவழிக்க வேண்டும். அவ்வாறு பணத்தையும் கொடுத்து, சாராயம் கால் போத்தலையும் கொடுத்து, சோறு பார்சல்களையும் கொடுத்தே மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி 1000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அரசியல் கட்சிகள் மேதினக் கூட்டத்திற்காக செலவழித்துள்ளன. தமது மக்கள் பலத்தை காட்டுவதற்காக செய்த தேவையில்லாத செலவே இது. தமது பலத்தை காட்டட அரசியல் கட்சிகள் இந்நாட்டு மக்களை பயன்படுத்திய கூட்டமாகவே மே தினம் அமைந்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே அதிகளவில் மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் அல்லாறு அழைத்து வரப்பட்டவர்களில் அதிகமானவர்கள் அவர்களுக்கு வாக்களிக்காதவர்களாகவும் இருக்கலாம்.