
யாழ். போதனா வைத்தியசாலை கொட்டிய மருத்துவ கழிவுகளால் அரியாலையில் பெரும்சுகாதார சீர்கேடு; கோபத்தில் ஏ-9 வீதியை முடக்கி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பெரும் சுகாதார சீர்கேடுகளால் மோசமான தொற்று நோய்கள் பரவக் கூடியவாறு அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் தமது வாழ்வுக்கு அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டிய அப்பகுதி மக்கள் திடீரென ஏ-9 வீதியை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
அரியாலை மத்தி ஜே.96 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதிக்கு அருகில் உள்ள காணியை கண் வைத்தியசாலை அமைப்பதற்காக யாழ்.போதானா வைத்தியசாலைக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி போதானா வைத்திசாலையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் காணியில், யாழ் வைத்தியசாலையின் கழிவு மற்றும், பாவனைக்கு உதவாத பொருட்கள் என்பன சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அக் காணியில் இருந்து துர்நாற்றம் வீசி வந்ததுடன் காகங்கள், நாய்கள் துர்நாற்றம் வீசும் கழிவுப் பொருட்களை அக் காணிக்குள் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு இழுத்து வந்துள்ளன.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காணிக்குள் சென்று பார்த்துள்ளனர். இதன் போது அங்கு மருத்துவ கழிவுகள், பம்பஸ், ஊசி, இரத்த பக்கெட்டுக்கள் என்பன இருப்பதை கண்டு அதிச்சியடைந்துள்ளனர்.
மேலும் சில மருத்து கழிவுகள் அங்கேயே வைத்து எரிக்கப்பட்டதையும் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பில் அந்தக் காணியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களின் கேள்விகளுக்கு உரிய முறையில் பதில் வழங்காத பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், முரண்பாடான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்தக் காணிக்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தில் இருந்து எவரும் வந்து தமது கேள்விகளுக்கு பதில் தாராத காரணத்தினால் மேலும் கோபடைந்த மக்கள் திடீரென ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த வீதியின் ஊடாக போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வீதியை விட்டு விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் வைத்தியசாலை நிர்வாகத்தினரை சம்பவ இடத்திற்கு வரவளைப்பதாகவும் உறுதியளித்தனர்.
இந்நிலையில் வீதியை விட்டு விலகி வீதியோரமாக நின்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அங்கு வந்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அங்கு வருவிருப்பதாகவும், அவருடன் மரியாதையாக கதைக்க வேண்டும் என்றும் குழப்பங்களில் ஈடுபடக் கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதன் பின் சில நிமிடங்களில் நோயாளர்காவு வண்டியில் ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வந்திறங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பணிப்பாளருடன் உரையாடும் போது அக் காணிக்குள் நடக்கும் சுகாதார சீர்கேடு தொடர்பில் எடுத்துக் கூறினர்.
இருப்பினும் மக்களுடைய முறைப்பாட்டையும், கோரிக்கைகளையும் முழுமையாக ஏற்க மறுத்த பணிப்பாளர், அந்தக் காணிக்குள் கண் வைத்திசாலை அமைக்கப்படும் என்றும், மரங்கள் நாட்டப்படும் என்றும், காணிக்குள் உள்ள குளம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அங்கு பம்பஸ் போன்ற கழிவுகள் கொட்டப்பட்டு, உலர விடப்பட்ட பின்னர் வேறு பகுதிக்கு கொண்டு சென்று அவை எரியூட்டப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தவறு என்றும், விரைவில் அவை அங்கிருந்து அகற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதன் பின்னர் மக்களின் கோரிக்கையை அடுத்து அந்தக் காணிக்குள் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை பொலிஸ் பாதுகாப்புடன் சென்று பணிப்பாளர் பார்வையிட்டார்.
இதன் போது அக் காணிக்குள் பிரவேசிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை பார்வையிட்ட பணிப்பாளர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக கூறி தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து மக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.