
சஜித் கட்சியிலிருந்து சில இளம் எம்.பி.க்கள் ரணிலிடம் தாவுவர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக மீண்டும் களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், புத்தாண்டுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இளம் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து நேரடியாக பிரசாரங்களை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக, பல்வேறு கட்சிகளிலிருந்தும் தங்களுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் இளம் உறுப்பினர்கள் பலர் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான இராப்போசன விருந்து அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பல இளம் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விருந்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத கட்சியின் இளைஞர்கள் குழுவும் நேருக்கு நேர் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகளுடன் அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பல அரசியல்வாதிகள் தங்களது ஆதரவாளர்களுடன் புதிய கூட்டணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.