
மைத்திரியை ஜனாதிபதியாக்கியது நான் செய்த மிகப் பெரும் தவறு
2015ஆம் ஆண்டில் தான் செய்த தவறை தற்போது திருத்திக்கொண்டுள்ளேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
2015ஆம் ஆண்டு காலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் நான் அதற்கு முடியாது என்று கூறி சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை (மைத்திரி) பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கினேன். அவர் நாட்டையும் தின்று, கட்சியையும் தின்றார். அப்போது செய்த தவறை நான் இப்போது திருத்திக்கொண்டுள்ளேன்.
இதன்போது மேலும் கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் சுதந்திரக் கட்சி மீண்டும் மேலே வருமா? மைத்திரிபால சிறிசேன இதற்கு இடமளிப்பாரா? என்று கேட்ட போது அவர் மேலும் கூறுகையில்,
நிச்சயமாக முடியும். நான் உதவியளிப்பேன். மைத்திரிபாலவிடம் நாங்கள் கேட்பதில்லையே, அவர் யாப்பை முழுமையாக இல்லாது செய்துள்ளார். அவருக்கு பைத்தியம் என்றார்.