இரு தேர்தலும் ஒரே நாளில்

இரு தேர்தலும் ஒரே நாளில்

ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிடுவதாகத் தெரிவித்த பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், சுயாதீன எதிரணி எம்.பி.யான உதய கம்மன்பில ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது பொதுஜன பெரமுனவுக்கு சாதகமாக அமையும்.ஆனால் நாட்டுக்கு பாதகமான நிலை ஏற்படுமெனவும் எச்சரித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பொதுஜன பெரமுனவுக்கு எதிரானதாக அமையும் என்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த பஷில்ராஜபக்ஸ ஷ முயற்சிக்கிறார்.ஆனால் ஜனாதிபதியின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத் தேர்தலை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு இன்னொரு பக்கத்தால் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு சட்ட சிக்கல்கள் ஏதும் கிடையாது.2024.07.14 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் தினத்தன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தால் இரண்டு தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த முடியும்.

இரு தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தினால் அது ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் சாதகமாக அமையும்.ஆனால் நாட்டுக்கு இது முக்கியமல்ல,
ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற மாட்டார் அதிக வாக்குகளை பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.ஆனால் பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமூலங்களையும்,ஒழுங்கு விதிகளையும் நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்.

அத்துடன் 21 ஆவது திருத்தத்துக்கு அமைய பலவீனமான பாராளுமன்றத்தையும் ஜனாதிபதியால் கலைக்க முடியாத நிலை ஏற்படும்.
நாட்டுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை தமக்கு சாதகமான நிலை ஏற்பட வேண்டும் என்ற நிலையில் இருந்து கொண்டு பொதுஜன பெரமுன செயற்படுகிறது.இதனால் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை கோருகிறார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )