
ரஷ்யா, உக்ரேனுக்கு கூலிப் படையாகச் செல்ல வேண்டாம்
இலங்கையின் முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா அல்லது உக்ரேன் இராணுவப் படைகளுடன் இணைய வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினர் தொடர்பான வெளிநாட்டு ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் அந்த வெளிநாட்டு படைகளுடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்தாலும், இந்த விவகாரத்தில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போரின் போது ரஷ்யாவில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் தூதரகங்கள் ஊடாக எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையினராக செயற்படுவோரில் 5 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்காக போராடி உயிரிழந்த மூவரும் இதில் உள்ளடங்குவதாகவும் அல்-ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய சம்பவத்தில், அதிக ஊதியம் காரணமாக உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிடுவதற்காக இராணுவத்தை விட்டு வெளியேறிய இலங்கை சிப்பாய் நிபுண சில்வா, உக்ரேனில் முன் வரிசையில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் போரிட்ட மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் பலர் இவ்வாறு போரில் கூலிப்படையாக சேரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.