
4 லட்சம் ரூபா நட்டஈடு கோரி இந்திய மீனவர்கள் மீதுவழக்கு தாக்கல்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், பத்து பேரிடம் இருந்து மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபா நட்ட ஈடு கோரி நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குத் தொடுநர் சார்பில் யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் மேலதிக அறிக்கையுடன் இணைந்து நட்ட ஈடு கோரி இந்த வழக்கினை நகர்த்திச் சென்றார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி இலங்கை கடற்பரப்புகள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இரண்டு படகுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மீனவர்களுக்கு எதிரான வழக்கு கடந்த மாதம் 28 ஆம் திகதி நிறைவு பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடற்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருவதால் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர் .
காரைநகர் கடற்பரப்புக்குள் ஒரு படகுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, கடற்படையினரை தாக்கியமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியமை, சிறு காயம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது .
இந்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மீனவர்கள் இருவரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கயநிதி பாலன் உத்தரவிட்டார் .
இந்த மீனவர்கள் அரச சொத்துக்கு சேதங்கள் விளைவித்த காரணத்தினால் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க முடியாது என வழக்கு தொடுநர் சார்பில் ஆஜரான பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் சார்பில் சட்டத்தரணி அருள் பிரகாசம் நிரோஸ் ஆஜரானார்.