
மஹிந்த, துமிந்த, லசந்த நீக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
அவர்கள் நீதிமன்றில் முன்வைத்துள்ள கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திசாநாயக்க, அழகியவண்ண மற்றும் அமரவீர ஆகியோரை கட்சியின் அந்தந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, கடந்த சனிக்கிழமை (மார்ச் 30) நடைபெற்ற விசேட கட்சி கூட்டத்தின் போது தீர்மானித்தது.
இதன்படி, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியிலிருந்து அழகியவண்ணவும், சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து அமரவீரவும் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி.குணவர்தன தேசிய அமைப்பாளராகவும், முன்னாள் மேல்மாகாண அமைச்சர் ஹெக்டர் பெத்மகே பொருளாளராகவும், முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சிரேஷ்ட உப தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே கட்சியில் இருந்து இவர்களை நீக்குவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேற்படி இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.