பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடந்தால் நாடு மீண்டும் அதல பாதாளத்தில் விழும்

பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடந்தால் நாடு மீண்டும் அதல பாதாளத்தில் விழும்

பாராளுமன்றத்தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் அதல பாதாளத்துக்கு செல்லும். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும். அத்துடன் எந்தக்கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் . ஆனால் அந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் வலியுறுத்த்துகின்றன. நாடு தற்போதுள்ள நிலையில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காது.

எனவே பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டு அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் அனைத்து வேலைத்திட்டங்களும் தடைப்படும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் பின்தள்ளப்படும். இதனால் நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் அதல பாதாளத்துக்கு செல்வதுடன் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும்.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக அதில் வெற்றிபெறுவார். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு சென்றால் நிலையான ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்த முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாக வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து செயற்பட முடியுமானால் அது நாட்டுக்கு பெரும் சக்தியாக அமையும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் கலந்துரையாடுவோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )