
இஸ்லாத்தை அவமதித்ததால் 4 வருடத்துக்கு உள்ளே தள்ளப்படும் ஞானசாரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஞானசாரர் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகேவினால் அறிவிக்கப்பட்ட போதே ஞானசார தேரருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் ஞானசார தேரர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக விதித்த நீதிபதி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தார்.
தேரர் என்ற வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது எனவும் நீதிபதி தீர்ப்பை வழங்கும் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2019 மே மாதத்தில் அவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இன்னுமொரு வழக்கில் நேற்றைய தினம் ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.