உச்ச நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமான மற்றதொரு செயல்; தமிழக முதலமைச்சருக்கு தமிழ்தேசியக் கட்சி எம்.பி.க்கள் கடிதம்

உச்ச நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமான மற்றதொரு செயல்; தமிழக முதலமைச்சருக்கு தமிழ்தேசியக் கட்சி எம்.பி.க்கள் கடிதம்

மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருட சிறைவாசத்திற்குப் பின் 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் நன்னடத்தையின்பால் விடுதலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகளான ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் 15 மாதங்களைக் கடந்த பின்னும் அவர்களை, அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ அனுமதிக்காமல், தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது .எனவே அவர்களை இலங்கைக்கும் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்களான சி.வி. விக்னேஸ்வரன், எஸ்.ஸ்ரீதரன்,செல்வம் அடைக்கலநாதன் ,எம்.ஏ.சுமந்திரன் ,சார்ள்ஸ்நிர்மலநாதன் ,எஸ்.கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் ,கலையரசன்,,சித்தார்த்தன் .இரா. சாணக்கியன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருட சிறைவாசத்திற்குப் பின் 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் நன்னடத்தையின்பால் விடுதலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகளான ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் இலங்கைக்கு அனுப்பப்படும்வரை, நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டவர் )Foreigners Regional Registration Office (FRRO(( முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நால்வரில் ஒருவரான சாந்தன் போதிய மருத்துவ சிகிச்சையின்மையால் கடுமையான உடல்நலக் குறைவுக்கு உட்பட்டு, ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், முதுமையின் பிடியிலுள்ள தாயைக் காண தாயகம் திரும்ப வேண்டும் என்ற தனது இறுதிக் கோரிக்கை நிறைவேறாமலேயே 2024.02.28 அன்று மரணம் அடைந்தார்.

ஏனைய மூவரும் 2022.11.12 ஆம் திகதி முதல் இன்றுவரை திருச்சி சிறப்பு முகாமில், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பவற்றில் ஈடுபடவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்த இவர்கள் விடுதலையின் பின்னர், சிறையில் இருந்த அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளதால் கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் உட்பட்டு, சாந்தனின் நிலையே தங்களுக்கும் ஏற்படும் என்கிற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

விடுதலையின் பின்னர் இவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். இருந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதவாறு தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது அவர்களின் இத்தனை ஆண்டு கால எதிர்பார்ப்பையும், காத்திருப்பையும் பெறுமதியற்றதாக்கியிருக்கிறது.

சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஜெயக்குமாருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ஒரு கண்ணின் பார்வைத் திறனை அவர் முழுமையாக இழந்துள்ளார். ரொபேர்ட் பயஸ் இரத்த அழுத்தம், சிறுநீரகக்கல் மற்றும் முதுகுத் தண்டுவட வலி போன்ற தீவிர உடலியல் உபாதைகளுக்கு ஆட்பட்டுள்ளார். இந்நிலையில், 15 மாதங்களைக் கடந்த பின்னும் அவர்களை, அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ அனுமதிக்காமல், தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்பதில் தாங்களும் கரிசனை கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

மேற்படி மூவரில் ஒருவரான ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரை சென்னையில் உள்ள அவரது குடும்பத்துடன் இணைப்பதற்கு தமிழக அரசின் பரிந்துரையே போதுமானது.

ரொபேர்ட் பயஸின் தாயார், தங்கை, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவரது மனைவி இலங்கையில் வசிக்கிறார். எனவே, அவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் ஏதெனுமொரு நாட்டிற்கு அனுப்பிவைப்பதாயின், அதற்குரிய கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெறவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, சிறப்பு முகாமிலிருந்து வீடுவித்து வெளிப்பதிவு அகதியாக தங்கவைக்க நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதாகும்.

மற்றும் ஒருவரான முருகன் லண்டனில் வசிக்கும் தனது மகளோடு இணைந்திருக்க வாய்ப்பளிக்கக் கோரி, லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான தூதரக நேர்காணலுக்கு ஒப்புதல் கிடைத்தும் சிறப்பு முகாம் அலுவலர்களால் அவர் அழைத்துச் செல்லப்படவில்லை என்றும், தூதரகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு வாரத்திற்கும் மேல் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அறியமுடிகிறது. எனவே, மேற்படி மூன்ற ஈழத்தமிழர்களது நிலையையும் தாங்கள் மிகுந்த கரிசனையோடு அணுகி, தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலே கழித்து, எஞ்சிய கடைசிக் காலத்திலாவது தங்களது குடும்பத்தினரோடு இணைந்து வாழவேண்டும் என்ற ஏக்கங்களோடிருக்கும் இவர்களை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து வெளிப்பதிவு அகதிகளாக பதிவுசெய்வதற்கும், அவர்களது குடும்பத்தினருடன் இணைத்துவைப்பதற்கும் ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )