
தமிழகத் தேர்தலில் பிரபாகரனின் பெயரால் வேட்பாளர்கள் உறுதிமொழி; வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமா?
சென்னை: 18ஆவது லோக்சபா தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்,”ஆண்டவன் மீது சத்தியமாக” என்பதற்கு பதிலாக ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக” என்று கூறி உறுதி மொழி எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரால் உறுதி மொழி ஏற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா? தள்ளுபடி செய்யப்படுமா? என்கிற புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியாவில் இப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது
ஆனால் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்க கொடி மற்றும் பிரபாகரன் படங்களை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது இதற்கு எதிர்ப்பும் சிக்கலும் வருவது தொடருகிறது. இந்நிலையில் 18ஆவது லோக்சபா தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரில் உறுதிமொழிகளை ஏற்றிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்படிந்து நடப்பதாக உறுதி மொழி தரும் வேட்பாளர்கள், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பெயரால் உறுதியேற்கிறேன் என தெரிவிப்பது சட்டத்துக்கு எதிரானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக, இந்திய சட்டத்துக்கு எதிராக உறுதி மொழி அளித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.