தெஹிவளை,பேருவளையில் உள்ளவை அல்-கொய்தா அமைப்பு பயன்படுத்திய வீடுகளா?

தெஹிவளை,பேருவளையில் உள்ளவை அல்-கொய்தா அமைப்பு பயன்படுத்திய வீடுகளா?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 சொகுசு வீடுகள் அல்-கொய்தா மற்றும் தௌஹீத் ஜமாத் அமைப்புகளால் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமை மனுக்களையும் நிராகரித்துள்ளது.

இந்த மனுக்கள் நேற்று முன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் லுக்மான் தாலிஃப் என்பவர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, இந்த வீடுகள் தௌஹீத் ஜமாத் மற்றும் அல்-கொய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் தெரிவித்த நிலையில் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமை மனுக்களையும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் நிராகரித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )