விடுதலை ஒன்றே மூச்சாகிய சுபாஷ் சந்திரபோஸ்

விடுதலை ஒன்றே மூச்சாகிய சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாற்று நாயகரான சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள்(ஜனவரி 23, 1897) நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி என தமிழரின் வரலாற்றில் என்றும் மேதகுவாய் விளங்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது போராட்ட வாழ்வின் அத்திவாரம் நூல்களால் கட்டியெழுப்பப்பட்டது என்று செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கு தங்களையே தற்கொடையாக்கிய சந்திரபோஸ், பகவத்சிங், பாலகங்காதர திலகர் போன்றோரில் தனக்கு ஏற்பட்ட பற்றும் கரிசனையும் இந்த வாசிப்பின் விளைவுகள் தான் என்றும் அச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை:

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுபாஷ் சந்திர போசை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’ எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.

அப்பாவிமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

1958 இனக் கலவர கோர அழிவுகள்:

சுபாஷ் சந்திர போஸை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது போன்றே மேதகு பிரபாகரனையும் நான்கு வயது சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த 1958 இனக் கலவரங்கள் தமிழர்க்காக போராட உத்வேகங் கொடுத்தன.

நிராயுதபாணிகளான அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் பேரினவாத இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை உணர்ந்தமைக்கு முக்கிய காரணமே 1958 இனக் கலவரங்களின் கோர அழிவுகளாகும். மேதகு பிரபாகரன் நான்கு வயது சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த 1958 இனக் கலவரங்களின் கோர அழிவுகளைக் கேள்விப்பட்டார். அவருக்கு தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த பரிவும் அனுதாபமும் ஏற்பட்டது.

எழுபதுகளின் பின் பகுதியில் தரப்படுத்தல் பிரபாகரனை பெரிதும் பாதித்தது. அத்தோடு அவர் வாழ்ந்த வல்வெட்டித்துறை பிரதேசம் அந்தக் காலத்திலேயே இராணுவ அடக்கு முறைகளை எதிர்கொண்டதை சிறுவன் பிரபாகரன் நேரில் கண்டதால் அவருக்கு ஆளும் அரசுக்கு மேல் வெறுப்புணர்ச்சி மேலோங்கியது.

இது பற்றித் தெரிவித்த மேதகு பிரபாகரன், நான் சிறுவயதில் சண்டித்தனமான ஆளும் அல்ல, யாருடனும் சண்டைக்கு போவதுமில்லை. ஆனால் எனது ஊரில் இராணுவத்தின் அடக்குமுறை தன்னில் பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்திருக்கின்றார்.

இந்திய விடுதலைப்போராட்டம் பற்றியும் அதற்கு தங்களையே தற்கொடையாக்கிய சந்திரபோஸ், பகவத்சிங், பாலகங்காதர திலகர் போன்றோரில் எனக்கு ஏற்பட்ட பற்றும் கரிசனையும் இந்த வாசிப்பின் விளைவுகள் தான். எனது போராட்ட வாழ்வின் அத்திவாரம் இத்தகைய நூல்களால் கட்டியெழுப்பப்பட்டது. அந்நியர் ஆட்சியின் ஆதிக்க அடக்கு முறைகளுக்கெதிரான கொதிப்புணர்வு இந்த வாசிப்புப் பழக்கத்தினாலேயே ஏற்பட்டது என, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

பிரபாகரன் -சுபாஷ் சந்திர போஸ் விடுதலை வீர புருஷர்:

‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர போராட்டத்தின் உன்னதமான தலைவர். இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி ஆயுதப் போர் மட்டுமே என தீர்மானித்தவர். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவரும் அவரே.

இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை போலவே, சிங்கள பேரினவாத அரசை ஆயுதப் போராட்டம் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை உலகிற்கு உணர்த்தியவர் மேதகு பிரபாகரன் ஆவார்.

தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொண்டவர். தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவுவதற்கு பற்றுறுதியோடு செயற்பட்ட வே.பிரபாகரன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பிரபாகரன் பிறந்தார்.

சிங்கள அரசை எதிர்த்து தனது பதினாறாவது வயதில் ஏழு நண்பர்களுடன் சேர்ந்து பெயரில்லாத இயக்கத்தை ஆரம்பித்தார். ஆயுதப்போராட்டத்தின் தேவையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். தலைமறைவாக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவரும் நண்பர்களும் தேடப்படும் நபர்களானார்கள்.

வே.பிரபாகரனின் சிறுவயதுக்காலம் தமிழ் இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற பேரவாவுடனும் தீர்க்கமான சிந்தனையுடனும் வளர்ந்தது. 1971 இலிருந்து வீட்டை விட்டு முற்றாக விலகிய பிரபாகரன் தமிழ் மாணவர் பேரவை இணைந்து போராடினார்.

இந்த நிலையில் சிங்கள அரசை எதிர்த்த மேதகு பிரபாகரன் பொலிசாரின் பார்வையிலிருந்து தப்பி 1973 இல் தமிழகம் சென்றார். பிரபாகரனுக்கு ஈழத்துப் பெரியார் (இராசரத்தினம்) அவர்களுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் போராட்டத் தீவிரத்தை வளர்த்தது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி வவுனியா பூந்தோட்டத்திலுள்ள முகாமில் வைத்து புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக பெயர் மாற்றம் பெற்றது.

இழந்த இறைமையை மீட்பதில் மட்டுமல்ல தமிழர்களுக்கென தனிக்கொடியை உருவாக்க பிரபாகரன் முனைந்தார். 1977 ஆம் ஆண்டு புலிகள் இயக்கக் கொடியாக இருந்த புலிக்கொடியிலிருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாவீரர் ஆரம்ப நாளன்று தமிழீழ தேசியக் கொடியை பிரபாகரன் பிரகடனப் படுத்தி வானில் ஏற்றினார்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஈழப் போராட்டத்தின் தீவிரமாக இளைஞர்கள் குழாம் ஈர்க்கப்பட்ட போதிலும் பிரபாகரன் ஆளணியை பெருக்குவதில் ஆர்வம் காட்டாது, இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கமாக தமது அமைப்பை வழிநடத்தினார்.

விடுதலைப்புலிகள் பல்வேறு நெருக்கடிகள், அடக்குமுறைகள், அழுத்தங்கள், சவால்களுக்கு முகம் கொடுத்தும் மரபு வழி சமரணியாக தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் அணியாக விரிவாக்கம் பெறுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பற்று, விடுதலை வேட்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், புலனாய்வுத்திறன், எதிரிகளையும் நண்பர்களையும் பிரித்தறியும் ஆற்றல், போராளிகளை அரவணைத்துச் செல்லும் பரிவு போன்றன முக்கிய காரணங்களாகும்.

சாதாரண புலி உறுப்பினர் ஒருவர் கூட தலைவரைப் பற்றி உரையாற்றும் போது மெய் சிலிர்ப்பதை தனிமனித வழிபாடாக சிலர் விமர்சித்தாலும் பிரபாகரன் என்ற ஆளுமையே வடக்கு கிழக்கு என்று விரிந்து பரந்து இளைஞர் அணியாக தமிழர் தேசம் ஒருமைப்பட காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் வேலுப்பிள்ளை பிரபாகரனை திசைதிருப்ப, விலைக்கு வாங்க அல்லது விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பலவீனப்படுத்த, மக்களிடமிருந்து அன்னியப்படுத்த மேற்கொண்ட பகீரத பிரயத்தனங்களைக் கடந்து விடுதலைப் புலிகள் எவருக்கும் அடி பணியாது வழிநடத்தி வந்தவர்.

பிரிட்டிசாருக்கு எதிராக மக்களை திரட்டிய நேதாஜி :

இந்திய விடுதலைக்காக பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பினார். அங்கிருந்து பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார்.

1941 ஆம் ஆண்டு ‘சுதந்திர இந்திய மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.

பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் ‘வான் ரிப்பன் டிராபின்’ உதவியுடன்சிங்கப்பூரில் ‘ராஷ் பிகாரி போஸ்’ தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.

இந்திய தேசிய ராணுவம்:( INA )

1943 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். இதன் பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கி 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது.

ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை, ஜெய் ஹிந்த்” என அப்பொழுது உரையாற்றினார்.

அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.

போஸ் மரணம் குறித்த சர்ச்சை:

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது.

நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே இருந்து விட்டது. “எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” எனகூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர்.மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரர்கள் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் திருப்புமுனை:

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைச் சக்தியான விடுதலைப் புலிகளின் பெருந்தலைவர் பிரபாகரன் இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்ற தத்துவார்த்த ரீதியாக வாழ்ந்தவர்.

அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப்பற்றுடைய தேசியவாதியாகவே கருத முடியும். தமிழ் மக்களை இன ரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்கு முறையை முறியடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நின்றார். அந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்தது தான் பிரபாகரனின் ‘தமிழ்த் தேசியப்பற்று’ என்று புலிகள் தலைவரைப் பற்றி சுதந்திர வேட்கை நூலில் திருமதி அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

-நவீனன்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )