பொலிஸ் அதிகாரம் வழங்க ஜனாதிபதி பயப்படுவது ஏன் ?; கோவிந்தன் கருணாகரம் எம்.பி.கேள்வி

பொலிஸ் அதிகாரம் வழங்க ஜனாதிபதி பயப்படுவது ஏன் ?; கோவிந்தன் கருணாகரம் எம்.பி.கேள்வி

சட்ட அனுபவம் நன்கு கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பாக ஏன் பயப்படுகிறார் எனத்தெரியவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான 3ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

அண்மையில் எமது ஜனாதிபதி , பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் பற்றி எடுத்துரைத்தார்.. காலத்துக்குக் காலம் எமது ஜனாதிபதி 13 தொடர்பாக, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏதேதோ கூறுவதும் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்திலிருந்து நாம் கண்ட அனுபவமாகும். சட்ட அனுபவம் நன்கு கொண்ட எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பாக ஏன் பயப்படுகிறார் என என்னால் அனுமானிக்க முடியவில்லை.

வட கிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் உத்தரவு பொலிஸாரால் மீறப்பட்டுள்ள எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.

இதனைவிட முக்கியமான கருத்தொன்றை எமது வெளிநாட்டமைச்சர் அண்மையில் எடுத்துரைத்துள்ளார். தமிழர்கள் சமஸ்டி கோருவதற்கு உரித்துடையவர்கள் மட்டுமல்ல சமஸ்டியானது பிரிவினைக்கு அத்திபாரமாக இருக்காது அது ஒற்றுமைக்கான அத்திபாரமே எனவும் இது தொடர்பாக பல வெளிநாடுகளின் சமஸ்டி அரசியலமைப்பின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். இது அமைச்சரது தனிப்பட்ட கருத்தா அல்லது அமைச்சரவையின் கருத்தா என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் ஒரு சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றைக் கூறியதையிட்டு நான் வரவேற்கின்றேன்.

அவ்வாறு கூறுவதுடன் அவரது கடமையினை நிறுத்திவிடாது அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் அவர் மேற்கொள்ள வேண்டும். இவரைப் போலவேதான் முன்னாள் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிகாலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கினார். ஆனால் இன்று அது தொடர்பாக அவர் வாய் திறப்பது கூட இல்லை. முரணான கருத்துக்களையே கூறிவருகின்றார் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )