
இந்துக்கள் கைதானதை ஏற்றுக்கொள்ள முடியாது; தெற்கைப் போலவே வடக்கிற்கும் மத சுதந்திரம் வேண்டும்
வவுனியா வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தில் பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக சபைக்கு நடுவே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாபீடத்தில் இருந்த பிரதி சபாநாயகருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறு கோரி வந்த போதும், சபாபீடத்தில் இருந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தினப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முயற்சித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சபைக்கு நடுவே வந்து பிரதி சபாநாயகருடன் வாதத்தில் ஈடுபட்டார்.
முதலில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில்,
இந்த நாட்டில் அடிப்படை உரிமை, மனித உரிமை உள்ளது. தமது மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதற்காக எவரையும் கைது செய்ய முடியாது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் மதச் சுதந்திரம் வடக்கிற்கும், தெற்கிற்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்றார்.
இதன்பின்னர் சபைக்கு நடுவே வந்த எதிர்க்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் தயவு செய்து நீங்கள் இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள். இந்த நாட்டில் மதச் சுதந்திரம் உள்ளது. பொலிஸ்மா அதிபரை அழைத்து இதனை கூறுங்கள் என்றார்.
இவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், முதலில் உங்கள் கோரிக்கைகளை உங்களின் இடங்களுக்கு சென்று கூறுங்கள். அவர்களுக்கு நான் பதிலளித்துள்ளேன். தேடிப்பார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளேன். நீங்கள் கூறுவதை போன்று பொலிஸ்மா அதிபரை இங்கே அழைக்க முடியாது என்றார்.
இதனை தொடர்ந்து ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில், கோரிக்கைகளை உங்களின் இடத்திற்கு சென்று கூறுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் இங்கே வந்து கண்காட்சியை நடத்துகின்றார். காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார்.
இதனையடுத்து நீதி அமைச்சரின் பதிலை தொடர்ந்து தனது கருத்தை மீண்டும் முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இனம், மதம் என எவ்வித பேதமும் இன்றி நாம் அனைவரும் மதச் சுதந்திரம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இங்கே கோயில், விகாரை, பள்ளி ஆகியவற்றுக்கு அந்தந்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு சென்று வழிபடும் உரிமை உள்ளது. குறிப்பாக இந்த பாராளுமன்றத்தில் 225 பேரும் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு நாம் நீதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவறாகும் என்று தெரிவித்தார்.