
நிறைவேற்று அதிகாரியின் கைப்பொம்மையாக சபாநாயகர்
நிதிக்குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி்க்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. அதனை அவர் செய்யாமல் அரச தரப்பு உறுப்பினர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். 3 வருடங்களாக இந்த பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கவில்லை. அதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய சபாநாயகரே பிரதான காரணம். சபாநாயகர் இன்று நிறைவேற்று அதிகாரியின் கைபொம்மையாகியுள்ளார். என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,
சபாநாயகராக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் நடவடிக்கைகள் பதவிகளில் இருந்து மீள வேண்டும்.அப்போதுதான் சபாநாயகர் ஆசனத்தில் இருந்துகொண்டு இரு தரப்புக்கும் நியாயமாக செயற்பட முடியும். ஆனால் எமது சபாநாயகர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியல் தொடர்புகளில் இருந்து மீளவில்லை. அவர் இன்னும் வெலிமடை பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக இருக்கிறார். இது அரசியல் நியமனம். ஜனாதிபதியே அந்த பதவியை வழங்குகிறார் அவ்வாறான நிலையில் சபாநாயகர் இந்த பதவியுடன் சபாநாயகர் ஆசனத்தில் இருக்கும்போது அவர் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் பின்னால் அரசியல்தான் உள்ளது.
கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் 3வருடங்களாக அந்தக் குழுவை சபாநாயகர் நியமிக்காமல் இருந்தார். அதேபோன்று அரச நிதிக்குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கவேண்டும் என நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதன்படி நிதிக்குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி்க்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. அதனை அவர் செய்யாமல் அரச தரப்பு உறுப்பினர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். 3 வருடங்களாக இந்த பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கவில்லை. அதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய சபாநாயகரே பிரதான காரணமானவர்.
ஏனெனில் அன்று இந்த நிதிக்குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கி இருந்தால், நாடு வீழ்ச்சியடைவது தொடர்பாக முன்கூட்டியே தெரிவித்திருப்போம். ஆனால் நாடு வீழ்ச்சியடைவதை ஆளும் தரப்பு உறுப்பினர் மறைத்து வந்தார். அதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய சபாநாயகரே பிரதான காரணமாகவுள்ளார்.
தற்போது கோப் குழுவுக்கு தலைவராக ஆளும் தரப்பு ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை இல்லாததால் அதன் உறுப்பினர்கள் தற்போது பதவி விலகி வருகின்றனர். சபாநாயகர் இன்று நிறைவேற்று அதிகாரியின் கைபொம்மையாகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க அவர் தவறியுள்ளார்.
பிரதேசசபை தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அரசாங்கத்திடம் பணம் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சிறப்புரிமையை மீறும் நடவடிக்கை என ஆளும் தரப்பு உறுப்பினர் சபையில் தெரிவித்தபோது, சபாநாயகர், குறித்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை பாராளுமன்றத்துக்கு அழைத்திருந்தார். இது நீதிமன்றத்தை அச்சுறுத்தும் நடவடிக்கை. இவ்வாறுதான் இந்த சபையை நாளுக்குநாள் சபாநாயகர் பாதாளத்துக்கு கொண்டு செல்கின்றார்.
இவ்வாறு சபாநாயகர் தொடர்ந்து அரசாங்கத்துக்கு சாரபாக செயற்பட்டு வருவதால் அவர் மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போயுள்ளது என்றார்.