
மகிந்தவின் வாக்கு மிகவும் அவசியம்; எதிர்க் கட்சிக்கு செல்லவும் நாங்கள் தயார்
வேண்டுமென்றால் எங்களுக்கு எதிர்க் கட்சியிலும் இருக்க முடியும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டமொன்றில் உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பு ரீதியில் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நடக்கும். ஆனால் அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம். அந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெறுவோம். அதில் நாங்கள் தோற்றால் எதிர்க்கட்சியில்தான் இருக்க வேண்டும். அப்படியான நிலைமை ஏற்பட்டால் காட்டிக்கொடுக்காத, கட்சித் தாவாத, முதுகெலும்புள்ள , தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூடிய எம்.பிக்கள் பலருடன் நாங்கள் எதிர்க்கட்சியில் அமருவோம். 1977இல் இருந்து 1994 வரை 17 வருடங்களுக்கு எதிர்க் கட்சியில் இருந்த எங்களுக்கு, 2015 முதல் 2019 வரையில் எதிர்க்கட்சியில் இருந்த எங்களுக்கு ஏன் மீண்டும் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது. அதனால் எதிர்க்கட்சிக்கும் சென்று எங்கே தவறு நடந்தது என்பதனையும் பார்க்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் யார் எங்கள் வேட்பாளர் என்பதனை தீர்மானிப்போம். எவர் வந்தாலும் மகிந்தவின் வாக்குகள் வேண்டும் என்பதனை நினைவுபடுத்துகின்றோம் என்றார்.