3 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு

3 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள 3 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு – அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர் அணியின் தலைவியும், கட்சியின் பிரதி தலைவருமான திருமதி.அனுஷியா சிவராஜா தலைமையில், மகளிர் அணியின் உப தலைவியும், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான திருமதி.செண்பகவள்ளியின் ஏற்பாட்டில் “பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் கொட்டகலை சி.எல்.எப். வளாக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் விடயம் மலையகத்தில் வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இரண்டாவது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம். தற்போது சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகின்றார். இது தற்காலிக தீர்வு மாத்திரமே. எனவே, நிரந்தர தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும்.

இறுதியாக காணி உரிமை விடயம். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காணி உரித்தும் வழங்கப்பட வேண்டும். இவற்றை செய்து, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை நாம் ஆதரிப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )