
சாணக்கியனை தாக்க முயன்ற மொட்டு எம்.பி; ரோஹித எம்.பி.மீது சாணக்கியன் முறைப்பாடு
அரச தரப்பு எம்.பி. யான ரோஹித அபேகுணவர்தன பிரதமர் அலுவலகத்தில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து,என்மீது தாக்குவதற்கு முயற்சித்தார். இதனால் பாராளுமன்றத்தில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது .ஆகவே இச்சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன் பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சபைக்குள் வந்த இரா. சாணக்கியன் எம்.பி. ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த போதே இவ்வாறு வலியுறுத்தியதுடன் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு நான் சற்று முன்னர் சென்றிருந்த போது அரச தரப்பு எம்.பி. யான ரோஹித அபேகுணவர்தன ‘ நீங்கள் ஏன் எங்களின் பிரதமரை சந்திக்க வந்துள்ளீர்கள்’ என்று மிரட்டலாக கேட்டார். அவர் உங்களின் பிரதமர் அல்ல இலங்கையின் பிரதமர்’ என்று நான் பதில் கூறினேன் .இதன்போது அவர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்து என் மீது தாக்குவதற்கு முற்பட்டார். முடிந்தால் லிப்டுக்கு அருகில் வா அழைத்தார் பிரதமர் அலுவலகத்தின் சேவையாளர்கள்,இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த பியங்கர இதற்கு சாட்சி சாட்சி.இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தான் என்னைப் பாதுகாத்தார்.
ரோஹித அபேகுணவர்தன எம்.பி முறையற்ற வகையில் நடந்து கொண்டார்.எமது பிரதமர் எமது பிரதமர் என்று குறிப்பிட்டுக் கொண்டு’ ‘நீ என்ன சொல்லுகிறாய்’என்று குறிப்பிட்டுக் கொண்டு என்னை நெருங்கி வந்தார்.கோட் ,சூட் போட்டிருந்தாலும் எனக்கும் சண்டித்தனம் செய்ய முடியும்.ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும்.நாங்கள் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம்.
நான் தமிழ் உறுப்பினராக இருப்பதால் ‘எமது பிரதமரை எவ்வாறு சந்திக்க முடியும்’ என்று கூறிக் என்னை அவர் என்னை அச்சுறுத்தினார் இதுவா நல்லிணக்கத்துக்கு வழங்கும் செய்தி.இது பாரதூரமானதொரு சம்பவம்.பாராளுமன்றத்தில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.வெளியிலும் எனது உயிருக்கு இவரால் அச்சுறுத்தல் காணப்படுகிறது.எனது சிறப்புரிமை மற்றும் பேச்சு மற்றும் கருத்து உரிமை மீறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் தமிழ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டும் இது தொடர்கிறது.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ ‘இந்த கோரிக்கை தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்