
இந்திய மீனவர்களுக்கு நேற்று அனுமதி மறுப்பு; 5,000 மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சர்வதேச கடல் எல்லையில் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் தமது படகுகளில் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பாதுகாப்பு நலன் கருதி தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி சீட்டு இரத்து செய்யப்பட்டது.
இராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் கோட்டைப்பட்டினம், நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் சமீபகாலமாக எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் வட பகுதி மீனவர்களின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், இலங்கை மீனவர்களின் பல லட்சம் ரூபா மதிப்பிலான கடற்தொழில் உடமைகள் சேதமடைவதால் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு எதிராக வட பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்,
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை கண்டித்தும் நேற்று வடக்கின் பருத்தித்துறை, அனலைதீவு, நயினாதீவு, காரைநகர், வடமராட்சி, மயிலட்டி, வெற்றிலைக்கேணி உள்ளிட்ட மீன் பிடி கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கறுப்பு கொடியுடன் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைப் பகுதியை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதுடன், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீன்பிடி படகுகளை சிறைபிடித்து செல்ல முடிவு செய்து நேற்றுக் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த இராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நலன் கருதி நேற்று ஒருநாள் மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டை இரத்து செய்தனர்.
மேலும் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தினர்.
மீன் பிடி அனுமதி சீட்டு வழங்காததால் பாம்பன் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டதுடன் 5,000 மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே தொடர்ந்து ஏற்பட்டு வரும் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் தரப்பில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.