
மொட்டுக்குள் குழப்பம் நீடிக்கிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் அல்லது ஆதரவு யாருக்கு வழங்கப்படும் என்பது தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கான தொடர் பிரச்சார வேலைத்திட்டங்களில் நாமல் ராஜபக்ச தற்போது ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய நிலையில், அதற்கு பதிலளித்த நாமல், அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாமல் ராஜபக்சவின் அறிக்கையின் ஊடாக, பிரசன்ன ரணதுங்கவின் அறிக்கையால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அதற்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு செயற்பட வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவித்துள்ள போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொதுஜன பெரமுனவில் இருந்து ஒரு வேட்பாளரை முன்வைக்க செயற்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதை இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.