
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அமெரிக்க இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். எலன் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் எலிசபெத் எவனுக்குமிடையில் வெளிவிவகார அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவில் அண்மைய மற்றும் நேர்மறையானமுன்னேற்றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதே இலங்கையின் பொருளாதார ஸ்திரத் தன்மை இலக்கை அடைவதற்கு அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள மக்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எலிசபெத் எம் எலன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.அவர் இலங்கையில் அரசாங்க அதிகாரிகள், ஊடகத்துறை பிரதிநிதிகள், டிஜிட்டல் தொடர்பான துறை சார்ந்தவர்கள், மற்றும் இளைஞர்கள் அணி தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.