
தமிழரசுக் கட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்போம்; சம்பந்தன், சிறீதரன் சூளுரை
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் .சிறீதரன் சூளுரைத்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர், அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்டஎம்.பி.யுமான இரா.சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் மாநாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து , இரு மாவட்ட நீதிமன்றங்களினாலும், மாநாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவரும்யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் .சிறீதரன் தெரிவிக்கையில்
கட்சிக்கு எதிரான எந்த வழக்கையும் எதிர்கொள்ள நாம் தயார். எமக்கெதிரான சூழ்ச்சிகள் , தடைகளை நாம் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம். என்னையும் எனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவற்றை கண்டு நாம் அஞ்ச போவதில்லை. என்னை தமது தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் எமது மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது.எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். நீதி நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார்.
அதேவேளை நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர், அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது நன்றாகப் புரியும்.நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.