
தமிழரசுக் கட்சியில் மீண்டும் தேர்தல்?
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சி மாநாட்டில் பொதுச் சபைக்கு அறிவிக்கப்படும் என கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய தலைவரொருவர் தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் பதவியில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவரொருவரிடம் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செயலாளர் பதவி தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் அண்மையில் முன்னாள் பதில் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்தின் இல்லத்தில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியிருந்தோம்.
இதன்போது குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருக்கிடையில் செயலாளா பதவியை ஒவ்வொரு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் சாட்சிகள் சகிதம் கடிதங்களும் பெறப்பட்டன.
இதன் பிரகாரம் முதல் ஒருவருடம் குகதாசனுக்கும் அடுத்த ஒரு வருடம் ஸ்ரீநேசனுக்கும் வழங்குவதாகவும் இணக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்த இணக்கப்பாடு எமது யாப்பு ரீதியாக இல்லாவிட்டாலும் பொதுச்சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற ரீதியில் 19 ஆம் திகதி தமிழரசுக் கட்சி மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக பொதுச் சபையில் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும். இதன்போது குழப்பம் எற்படுமாக இருந்தால் செயலாளா பதவிக்கு தேர்தல் ஒன்றை நடாத்தி புதிய செயலாளர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.